திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர அம்மோனியா வாயு கசிவு விபத்தில், பலி எண்ணிக்கை தற்போது 7 ஆக உயர்ந்துள்ளது ஒட்டுமொத்த தமிழகத்தையும் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
முன்னதாக, இந்த நச்சு வாயு கசிவு காரணமாக 6 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி மேலும் ஒரு தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்த நச்சு வாயுவை சுவாசித்ததால் பாதிக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 70-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்குத் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. தொழிற்சாலையின் குளிரூட்டும் பிரிவில் ஏற்பட்ட இந்த விபத்து குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) ஆகியோர் நேரில் சென்று விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்துள்ளனர்.
தொழிற்சாலையின் பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் உரிய வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படாததே இந்த 7 பேரின் மரணத்திற்குக் காரணமா என்ற கோணத்தில் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவது தொழிலாளர்களின் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
