திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே மஞ்சங்கரணையிலுள்ள தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர அம்மோனியா வாயு கசிவு விபத்தில் சிக்கி, தொழிலாளர்கள் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் நச்சு வாயு தாக்கி மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட 70-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) ஆகியோர் நேரில் சென்று விபத்து நடந்த தொழிற்சாலையைப் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தக் கொடூர விபத்து குறித்து முழுமையாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் சாந்தாராம் தலைமையில் உயர்மட்ட விசாரணைக்குழு ஒன்றை அமைத்துத் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, விபத்து நடந்த தொழிற்சாலைக்குள் நச்சு வாயுவின் தாக்கம் மற்றும் காற்றில் அதன் வீரியம் எவ்வளவு உள்ளது என்பது குறித்து நவீன உபகரணங்களுடன் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும் (NDRF) நேரில் சென்று தற்பொழுது தீவிர ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
