தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் பகுதியில் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த சுமார் 1 லட்சம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து கடுமையான சேதமடைந்துள்ளன. இந்தச் சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ​இந்தக் கிடங்கில் நெல் மூட்டைகளைப் பாதுகாப்பாக மூடி வைக்கப்பட்டிருந்த தார்ப்பாய்கள் ஆங்காங்கே கிழிந்து, போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ஏற்கனவே வெயில் மற்றும் பனியால் பாதிக்கப்பட்டு வந்த நெல் மூட்டைகள், தற்பொழுது திடீரென பெய்த கனமழையின் காரணமாக முற்றிலும் நனைந்து வீணாகியுள்ளன. அதிகாரிகளின் அலட்சியமே தங்களின் ஒட்டுமொத்த உழைப்பும் வீணாவதற்குக் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ள தஞ்சை மாவட்ட விவசாயிகள், தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், இனிவரும் காலங்களில் நெல் மூட்டைகளைப் பாதுகாக்க முறையான சேமிப்புக் கிடங்கு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.