நாடு முழுவதும் நீட் மறுதேர்வு ஜூன் 21-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், தேசிய தேர்வுகள் முகமையின் (NTA) கவனக்குறைவு  வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த அப்துல்லா முகமது தாலிப் என்ற மாணவருக்கு வழங்கப்பட்ட ஹால் டிக்கெட்டில், அவரது தேர்வு மையம் இந்தியாவின் எல்லையைத் தாண்டி, ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் உள்ள ‘அபுதாபி இந்தியன் பள்ளி’ (Abu Dhabi Indian School) எனக் குறிப்பிடப்பட்டிருந்தது கண்டு மாணவரும் அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சியடைந்தனர். சொந்த மாநிலத்தில் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த மாணவருக்கு, வெளிநாட்டில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்ட இந்த விசித்திரமான குளறுபடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக அதிர்ச்சியடைந்த மாணவரின் தந்தை தேசிய தேர்வுகள் முகமையிடம் உடனடியாகப் புகார் அளித்தார். பாஸ்போர்ட் கூட இல்லாத நிலையில், மறுநாளே தேர்வு எழுத அபுதாபிக்குச் செல்வது சாத்தியமற்றது என்று சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தத் தவறு நடந்துள்ளதாக என்.டி.ஏ அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர். மேலும், மாணவரின் புகாரைப் பரிசீலித்து, அன்று மாலை 4 மணிக்குள் அவரது தேர்வு மையத்தை மாற்றி புதிய ஹால் டிக்கெட் வழங்கப்படும் என என்.டி.ஏ தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடர் குளறுபடிகள் நீட் தேர்வின் நம்பகத்தன்மை குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் மீண்டும் பலத்த கேள்விகளை எழுப்பியுள்ளது.