சமூக வலைத்தளங்களில் பார்ப்போரின் நெஞ்சை பதறவைக்கும் மற்றும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி காட்டுத்தீயாய் பரவி வருகிறது. ஒரு தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவியை, அவரது தந்தை பள்ளியில் கொண்டு போய் விடும்போது, அந்தச் சிறுமி ஒன்றுக்கும் மேற்பட்ட தண்ணீர் பாட்டில்களை எடுத்துச் சென்றுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தந்தை, “எதற்காக இத்தனை தண்ணீர் பாட்டில்களைக் கொண்டு போகிறாய்?” என்று விசாரித்துள்ளார்.

அதற்கு அந்தச் சிறுமி, “எங்கள் பள்ளிக்கூடத்தில் மாணவர்களுக்குக் குடிக்கத் தண்ணீர் கிடையாது” என்று மிகச் சாதாரணமாகக் கூறிய பதில் ஒட்டுமொத்தப் பெற்றோர்களையும் உன்னிடத்தில் உறைந்துபோக வைத்துள்ளது. மேலும் அந்த வீடியோவில் பேசும் சிறுமி, “பள்ளியில் ஆசிரியர்களுக்கும், முதல்வர் (பிரின்ஸ்பல்) அவர்களுக்கும் மட்டும்தான் தண்ணீர் உண்டு; மாணவர்களுக்குக் கிடையாது, ஒருவேளை ஆசிரியர்களிடம் தண்ணீர் கேட்டால் கூட அவர்கள் எங்களைக் கடுமையாகத் திட்டுவார்கள்” என்று மழலை மாறாமல் கூறியுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் “குழந்தைகளுக்குக் குடிக்கக் கூட தண்ணீர் தராத இந்த பள்ளிக்கூடம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கொந்தளித்து வருகின்றனர். மேலும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரை கமெண்ட் பகுதியில் டேக் செய்து, சம்பந்தப்பட்ட பள்ளி மீது உடனடியாக அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.