இந்தியாவின் வணிகத் தலைநகரமான மும்பை, தற்போது இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வருகிறது. பருவமழை பொய்த்துப் போனதாலும், தாமதமானதாலும் மும்பைக்கு குடிநீர் வழங்கும் 7 முக்கிய ஏரிகளின் நீர்மட்டம் அபாயகரமான அளவுக்குக் குறைந்துள்ளது. இதன் காரணமாக, மாநகராட்சி நிர்வாகம் நகரம் முழுவதும் கடுமையான தண்ணீர் வெட்டுக்களை அமல்படுத்தியுள்ளது.
சோஷியல் மீடியாவில் வைரலாகி வரும் ஒரு இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோவில், அங்குள்ள நிலைமையைக் குறித்துப் பேசிய நபர், “மும்பையில் இன்னும் வெறும் 45 நாட்களுக்கு மட்டும்தான் தண்ணீர் இருப்பு உள்ளது” என்ற நெஞ்சை பதறவைக்கும் அதிரடித் தகவலைப் பகிர்ந்துள்ளார். மேலும் நிலைமை மோசமானதால் ஸ்விம்மிங் பூல்களுக்கு வழங்கப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது என்றும், பெரிய கன்ஸ்ட்ரக்ஷன் வேலைகளுக்கு வழங்கப்படும் தண்ணீருக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
அந்த வீடியோவில் பேசியவர், “இந்தக் கொடூரமான பாதிப்பு மும்பைக்கு மட்டும் வந்தது அல்ல, நாம் இப்போதே விழித்துக் கொள்ளவில்லை என்றால், நாளை இந்தியாவின் எந்த மாநிலத்திற்கு வேண்டுமானாலும் இந்த ஆபத்து வரலாம்” என்று ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் ஒரு மிகப்பெரிய எச்சரிக்கையை விடுத்துள்ளார். அரபிக்கடலால் சூழப்பட்ட ஒரு மாநகரம், இன்னும் சில வாரங்களில் குடிக்கத் தண்ணீரின்றி தவிக்கப் போகிறது என்ற உண்மை ஒட்டுமொத்த தேசத்தையும் யோசிக்க வைத்துள்ளது.
வீடுகளில் குழாய்களை வீணாகத் திறந்து வைக்காமல் இருப்பது, தண்ணீரை மறுசுழற்சி செய்வது போன்ற சிறு சிறு மாற்றங்களை நாமும் உடனே செய்ய வேண்டும்; இல்லையெனில், அடுத்த 45 நாள் கவுண்ட்டவுன் நம் வீட்டு வாசலைத் தட்டும் நாள் தொலைவில் இல்லை என்பதே இந்த வைரல் ரீல்ஸ் உணர்த்தும் கசப்பான உண்மையாகும்.
