காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே திருவிழாவிற்கு வந்த 15 வயது பள்ளி மாணவியை ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்று, 3-வதாக கட்டாயத் திருமணம் செய்துகொண்ட பட்டதாரி இளைஞரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் அதிரடியாகக் கைது செய்தனர். மல்லிகாபுரம் கிராமத்துத் திருவிழாவிற்கு வந்திருந்த 11-ஆம் வகுப்பு மாணவி திடீரென மாயமானதைத் தொடர்ந்து, அவரது பெற்றோர் உத்திரமேரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து, சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் மாணவியின் செல்போன் எண்களை ஆய்வு செய்தபோது, அச்சரப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் (லாட்ஜ்) தங்கியிருந்த சேந்தாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஜீவானந்தம் (45) என்ற பட்டதாரி வாலிபரையும், கழுத்தில் தாலியுடன் இருந்த அந்த மாணவியையும் போலீசார் மீட்டனர்.
போலீசாரின் தீவிர விசாரணையில், கைது செய்யப்பட்ட ஜீவானந்தத்திற்கு ஏற்கனவே தேவி மற்றும் சுமித்ரா ஆகிய இரு மனைவிகள் இருப்பதும், அவர்களுக்குக் குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது. இதில் இரண்டாவது மனைவி தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழ்நிலையில், பத்தாம் வகுப்பு முடித்த அந்த மாணவியைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, கடத்திச் சென்று அச்சரப்பாக்கம் கோவிலில் வைத்துத் தாலி கட்டி, விடுதியில் தங்கி அத்துமீறியது அம்பலமாகியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியும் தற்போது கர்ப்பமாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில், ஜீவானந்தம் மீது போக்சோ சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
