தமிழகத்தில் புதிய முதலமைச்சராக நடிகர் விஜய் பொறுப்பேற்று 40 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அவரது அரசுக்கு எதிராகப் பிரபல நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் மதிவதனி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் அவரது பேட்டியில், முதலமைச்சர் விஜய் பதவிக்கு வந்ததில் இருந்து சினிமா பிரபலங்களைச் சந்தித்து புகைப்படம் எடுப்பதிலேயே அதிகக் கவனம் செலுத்தி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

சினிமா பின்னணியில் இருந்து வந்தவர் என்பதால் பிரபலங்களைச் சந்திப்பது தவறில்லை என்றாலும், அன்றாடப் பிரச்சினைகளால் அவதிப்படும் நடுத்தர மக்களின் துயரங்களைக் கவனிப்பதுதானே ஒரு முதலமைச்சரின் முதல் வேலை என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாக ஆதங்கப்பட்ட மதிவதனி, ஒரே நாளில் 12 கொலைகள் நடப்பதாகக் கேள்விப்படும்போது மக்கள் மனதில் பயம் ஏற்படுவதாகவும், கடந்த இரண்டு மாதங்களில் குற்றங்கள் இரட்டிப்பாகி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் சமயத்தில் தங்களைக் காப்பாற்றுவார் என்று நம்பி விஜய்க்கு பெருமளவில் வாக்கு செலுத்திய தமிழ்நாட்டுப் பெண்களுக்கு இந்த ஆட்சியில் என்ன பாதுகாப்பு இருக்கிறது என்றும், அவர்களுக்கு முதலமைச்சர் என்ன பதில் சொல்லப் போகிறார் என்றும் அவர் அதிரடியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆட்சிக்கு வரும் முன்பு சட்டம் ஒழுங்கைச் சீரமைப்பேன் எனப் பெரிய வாக்குறுதிகளை அளித்த முதலமைச்சர் விஜய், இனிமேலாவது வெறும் புகைப்படங்களுக்கு முக்கியத்துவம் தராமல், குற்றங்களைக் கட்டுப்படுத்தக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற மதிவதனியின் இந்த நேர்காணல் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.