அமெரிக்காவில் உடல் எடையில் பெரும் வித்தியாசத்தைக் கொண்ட காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், 136 கிலோ எடையுள்ள காதலி தனது காதலன் மீது குதித்து அமர்ந்ததால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு காதலன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த கீனோ பட்லர் (44) என்ற நபர், சுமார் 54 கிலோ உடல் எடையைக் கொண்டவர். இவர் சுமார் 136 கிலோ எடையுள்ள விண்டி தாமஸ் என்ற பெண்ணுடன் வசித்து வந்தார். இவர்களுக்கு இடையே கடந்த 2018 மார்ச் 18 அன்று திடீரென ஏற்பட்ட தகராறு, பின்னர் கைகலப்பாக மாறியது.

இதில் ஆத்திரமடைந்த விண்டி தாமஸ், தனது காதலன் கீனோ பட்லர் மீது பாய்ந்து ஏறி அமர்ந்துள்ளார். இதனால் அவரது அதீத எடையைத் தாங்க முடியாமல் கீனோ பட்லரின் நெஞ்சு மற்றும் கழுத்துப் பகுதியில் கடுமையான அழுத்தம் ஏற்பட்டு மூச்சுத் திணறல் உண்டானது. உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். அவரது மரணத்திற்கு நெஞ்சு மற்றும் கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட அதீத அழுத்தமே காரணம் என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.instagram.com/reel/DZngyX-PkKp/?utm_source=ig_embed&ig_rid=AjnHGVQebve-_iF_br6fLfk

இச்சம்பவத்தைத் தொடர்ந்து விண்டி தாமஸ் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது. நீண்ட விசாரணைக்குப் பிறகு, நீதிமன்றத்தில் விண்டி தாமஸ் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, அவருக்கு 18 ஆண்டுகள் முதல் 36 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தச் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இச்செய்தியைக் கண்ட இணையவாசிகள், காதலர்களுக்கு இடையே இருந்த இந்த உடல் எடை வித்தியாசமே மரணத்திற்கு வழிவகுத்துள்ளதாகக் குறிப்பிட்டு, “காதலில் உடல் எடையும் கூட உயிருக்கு ஆபத்தாக முடியும்” என்றும், “இது ஒரு கொடூரமான கொலை” என்றும் தங்களது மாறுபட்ட கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.