வேலைக்கான நேர்காணலின் போது தகுதிகள் மற்றும் திறமைகள் எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு நேர்காணலுக்கு வரும் நபர்களின் உடை மற்றும் அணுகுமுறையும் முக்கியமாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், அமேசான் பிரைம் வீடியோ (Prime Video) நிறுவனத்தின் சமூக மற்றும் தலையங்கப் பிரிவின் தலைவரான பவிஷா ஜெயின், சமீபத்தில் தனது நிறுவனத்தில் நடந்த ஒரு விநோதமான நேர்காணல் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். சிறந்த சுயவிவரம் (Profile) மற்றும் நல்ல தகுதிகள் இருந்த ஒரு பெண், நேர்காணலின் போது அணிந்து வந்திருந்த டி-சர்ட்டில் எழுதப்பட்டிருந்த வாசகம் காரணமாகத் தனக்குக் கிடைக்கவிருந்த பெரிய வேலை வாய்ப்பை இழந்துள்ளார்.
அந்தப் பெண் நேர்காணலின் போது, “வேலை செய்வதற்கு மிகவும் கவர்ச்சியானவள்” (Too hot for a job) என்ற பொருள்படும் வாசகம் அச்சிடப்பட்ட டி-சர்ட்டை அணிந்து வந்துள்ளார். அந்தப் பெண்ணின் திறமைகள் மற்றும் பணி அனுபவம் நிறுவனத்திற்கு மிகவும் பிடித்துப் போயிருந்தாலும், ஒரு முறையான நேர்காணல் நடக்கும் இடத்திற்கு இதுபோன்ற வாசகங்கள் அடங்கிய ஆடையை அணிந்து வந்தது அவரது தவறான புத்திசாலித்தனத்தையும், முதிர்ச்சியற்ற அணுகுமுறையையும் காட்டுவதாக பவிஷா ஜெயின் தெரிவித்துள்ளார். திறமை இருந்தும், முறையான ஆடைத் தேர்வில் காட்டிய அலட்சியம் காரணமாக அந்தப் பெண்ணுக்கு வேலை மறுக்கப்பட்ட இந்தச் சம்பவம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
