அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக விமர்சித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தற்போது தனது சட்டமன்ற உறுப்பினர் (MLA) பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். தவெக ஆட்சியைப் பிடித்ததில் இருந்தே அதிமுகவில் உட்கட்சிப் பூசல் உச்சகட்டத்தை எட்டியிருந்த நிலையில், விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த சி.விஜயபாஸ்கரின் இந்த திடீர் ராஜினாமா முடிவு தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது.

​சி.விஜயபாஸ்கரின் இந்த ராஜினாமா அறிவிப்பை அடுத்து, புதுக்கோட்டையில் உள்ள அதிமுகவினர் வீதிகளில் இறங்கி பட்டாசுகளை வெடித்தும், பொதுமக்களுக்கு லட்டுகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சியைக் கொண்டாடினர். அப்போது, “துரோகி விஜயபாஸ்கர் ஒழிக.. அண்ணா திமுகவைக் காட்டிக் கொடுத்த விஜயபாஸ்கர் ஒழிக..” என்று எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் ஆவேசமாக முழக்கங்களை எழுப்பியதால் அந்தப் பகுதியே பெரும் பரபரப்புக்குள்ளானது.