தொழில்நுட்ப வளர்ச்சியில் உலக நாடுகளையே மிரள வைத்து வரும் சீனாவில், மனிதவடிவ ரோபோ (Humanoid Robot) ஒன்று வீதியில் நடந்து சென்ற பொதுமக்களிடம் தனது “மின்சாரக் கட்டணத்தைச்” செலுத்தப் பணம் கேட்டு யாசகம் பெற்ற அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அறிவியல் புனைகதைத் திரைப்படங்களில் வருவது போன்ற தோற்றமுடைய அந்த ரோபோ, சாலையில் நடந்து செல்வோர் முன்னிலையில் கையேந்தி நின்று கொண்டு உதவி கேட்டுள்ளது. அந்த ரோபோவின் கைகளில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கான கியூஆர் கோடு (QR Code) அட்டை மற்றும் ரொக்கப் பணத்தைப் பெற்றுக் கொள்வதற்கான தட்டு ஒன்றும் பொருத்தப்பட்டிருந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும், அந்த ரோபோவில் பொருத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கி வழியாக, “எனது மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தப் பண உதவி செய்யுங்கள்” என்று அது உருக்கமாகக் கெஞ்சும் குரலும் பதிவாகியுள்ளது. இதைப் பார்த்த அங்கிருந்த பாதசாரிகள் பலரும் வியப்புடனும், அதிர்ச்சியுடனும் தங்களின் மொபைல் போன்களில் இதைப் புகைப்படம் எடுத்துச் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர்.
சிலர் அந்த ரோபோவின் கையில் இருந்த கியூஆர் கோடைப் பயன்படுத்தி டிஜிட்டல் முறையிலும், சிலர் ரொக்கமாகவும் நிதியுதவி செய்துள்ளனர். ரோபோக்களின் பயன்பாடு அதிகரித்து வரும் தற்காலத்தில், ரோபோவே தனக்கான மின்சாரச் செலவுக்குப் பிச்சை எடுக்கும் இந்த வினோதக் காட்சி, இணையத்தில் பெரும் விவாதத்தையும், அதே சமயம் நகைச்சுவையையும் ஏற்படுத்தியுள்ளது.
WATCH: A humanoid robot in China was seen asking pedestrians for donations to help pay its “electricity bill,” using a speaker, donation tray, and QR code for digital payments. pic.twitter.com/wKqjpqkpLJ
— Breaking911 (@Breaking911) June 16, 2026
