மகாராஷ்டிர மாநிலம் வால்துனி பகுதியில், கூடுதல் வரதட்சணை கேட்டு கர்ப்பிணி என்றும் பாராமல் மருமகளுக்கு வலுக்கட்டாயமாக மொட்டை அடித்த புகாரில் கணவர் குடும்பத்தினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட அப்சானா அன்சாரி என்ற பெண்ணிற்கு, அதே பகுதியைச் சேர்ந்த சமீர் அன்சாரி என்பவருடன் திருமணம் ஆகியுள்ளது. திருமணமான ஒரே மாதத்தில் இருந்தே கணவர் வீட்டார் அவரிடம் கூடுதல் வரதட்சணை கேட்டுப் பல கொடுமைகளைச் செய்யத் தொடங்கியுள்ளனர்.
மிகக் கொடுமையாக, அவர் கர்ப்பமாக இருந்த நிலையிலும் அவருக்குச் சரியான உணவு கூட வழங்காமல் பட்டினி போட்டுள்ளனர். வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டியைப் பூட்டி வைத்து, உணவைத் தராமல் கணவர் குடும்பத்தினர் சித்திரவதை செய்ததாகப் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீருடன் குற்றம் சாட்டியுள்ளார். தனது பெற்றோரின் ஏழ்மை நிலை கருதி, இப்பேற்பட்ட கொடுமைகளை அந்தப் பெண் சகித்துக் கொண்டுள்ளார்.
இதற்கிடையே, கடந்த ஜூன் 7-ஆம் தேதியன்று அந்தப் பெண்ணின் தலையில் பேன் இருப்பதாகப் பொய் கூறி, கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து வலுக்கட்டாயமாக அவருக்கு மொட்டை அடித்து வன்கொடுமை செய்துள்ளனர். அவர்களின் பிடியில் இருந்து ஒருவழியாகத் தப்பிய அந்தப் பெண், தற்போது அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பார்ப்போரை நெஞ்சம் பதற வைத்துள்ளதுடன், பெரும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மிகக் கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் நீர் ஹசன் அன்சாரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
