உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டத்தில், தற்கொலை செய்துகொண்ட 26 வயது உதவி கிளை போஸ்ட் மாஸ்டரின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முடாய் துணை அஞ்சலகத்தில் பணிபுரிந்து வந்த நிகில் வர்மா என்ற இளைஞர், தனது வீட்டின் அருகே உள்ள ஒரு வயல்வெளி அறையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.
மேலும் அவரது சட்டைப் பையிலிருந்து மீட்கப்பட்ட மூன்று பக்க தற்கொலைக் கடிதத்தில், தனது உயர் அதிகாரிகள் தன்னைத் தொடர்ந்து மனரீதியாகத் துன்புறுத்தியதாகவும், லஞ்சம் கேட்டு மிரட்டியதாகவும் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். “எனக்கு நீதி கிடைத்து, குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைக்கும் வரை எனது உடலைத் தகனம் செய்ய வேண்டாம்” என்று அவர் தனது குடும்பத்தினரிடம் அஞ்சலிக் கடிதத்தின் மூலம் ஆர்த்தியாகக் கோரியுள்ளார்.
இதனால் நிகில் வர்மாவின் தந்தை தர்மேந்திரா அளித்த புகாரின்படி, நிகிலின் விடுமுறையை அங்கீகரிப்பதற்காக ‘மெயில் ஓவர்சீயர்’ என்ற அதிகாரி தொடர்ந்து பணம் கேட்டு வந்துள்ளார். இந்தப் பணத்தில் ‘போஸ்டல் சூப்பிரண்டென்ட்’ அதிகாரியிக்கும் பங்கு உள்ளதாகக் கூறி, பணம் தராவிட்டால் வேலையை விட்டு நீக்கிவிடுவோம் என்று அவர்கள் நிகிலை மிரட்டியுள்ளனர்.
இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான நிகில், இந்தத் தீவிர முடிவை எடுத்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக அஞ்சலக கண்காணிப்பாளர் மற்றும் மெயில் ஓவர்சீயர் ஆகிய இரு உயர் அதிகாரிகள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைத் தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
