உத்தரப் பிரதேச மாநிலம் ஷ்ரவஸ்தி மாவட்டத்தில் உள்ள பஸ்பரியா புரைனா கிராமத்தில், கடந்த ஒரு வாரமாக ஒரு பசு மாடு தொடர்ந்து ஒரே வயல்வெளியை வட்டமடித்துச் சுற்றி வந்துள்ளது. பகல், இரவு எனத் தொடர்ந்து இடைவெளி விட்டு விட்டு அந்தப் பசு வட்டமடித்ததால், சுற்றுவட்டாரக் கிராம மக்கள் மத்தியில் இது பெரும் ஆச்சரியத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியது.

இதைக் கேள்விப்பட்ட நூற்றுக்கணக்கான மக்கள், இது ஏதோ ‘தெய்வீக அதிசயம்’ என்று நம்பி அந்தப் பசுவை தரிசிப்பதற்காகத் திரண்டனர். நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்ததால், அங்கு மக்கள் கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து வழிபடவும் தொடங்கினர். இந்த விசித்திர நிகழ்வின் வீடியோ சமூக வலைத்தளங்களிலும் தீயாய் பரவியது.

இந்நிலையில், எட்டாவது நாளில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த அந்த வயல்வெளிக்கு போலீஸார் அதிரடியாகப் புகுந்தனர். அங்கு கூடிருந்த மக்களைக் கலைத்த போலீஸார், அந்தப் பசுவை மீட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு அந்தப் பசுவிற்குப் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ஒரு அதிர்ச்சியூட்டும் உண்மை வெளிவந்தது.

அந்தப் பசுவிற்கு எந்த ஆன்மீக சக்தியும் இல்லை என்றும், அதற்கு ‘ஹைப்போகிளைசீமியா’ (Hypoglycemia – இரத்த சர்க்கரை குறைவு நோய்) என்ற மருத்துவப் பாதிப்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. விலங்குகளுக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டால், அவை இப்படி ஒரே இடத்தில் சுற்றும் அறிகுறி தோன்றும் என மருத்துவர்கள் விளக்கினர். தற்போது அந்தப் பசுவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அது விரைவில் குணமடைய மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.