ஒருவர் தனது முழு வாழ்க்கையையும் ஒரு கடினமான கலையைக் கற்பதற்கு அர்ப்பணிக்கும் போது, அவரது உடல் சாதாரண மனிதர்களின் வரம்புகளைக் கடந்து ஒரு நம்பமுடியாத அதிசயமாக மாறும் என்பதற்கு உதாரணமாக, சீனாவைச் சேர்ந்த 53 வயது தற்காப்புக் கலை நிபுணர் ஜாங் லாங்சியாங்கின் கைகள் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளன. தற்காப்புக் கலை உலகம், ஒருவரின் சகிப்புத்தன்மையைச் சோதிப்பது மட்டுமல்லாமல் உடலமைப்பையே மாற்றும் பல கடுமையான பயிற்சிகளைக் கொண்டது.
சீனாவைச் சேர்ந்த ஜாங், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ‘இரும்பு மணல் உள்ளங்கை என்ற பண்டைய குங்-ஃபூ கலையை மிகவும் கடுமையாகப் பயிற்சி செய்து வருகிறார். இதன் விளைவாக, அவரது உள்ளங்கை தற்போது ஒரு சாதாரண மனிதனின் உள்ளங்கையை விட இரண்டு மடங்கு, அதாவது சுமார் 8 சென்டிமீட்டர் தடிமனாக எஃகு போல மாறியுள்ளது. இதுகுறித்து தனது கடுமையான பயிற்சி நாட்களை நினைவுகூரும் ஜாங், “இந்தப்பயிற்சி சலிப்பூட்டுவதாகவும், தாங்க முடியாத வலியால் நிறைந்ததாகவும் இருந்தது.
தினமும் குறைந்தது இரண்டு முதல் மூன்று மணி நேரம், சிறிய இரும்பு மற்றும் எஃகு பந்துகள் நிரப்பப்பட்ட மணல் மூட்டைகளைத் எனது உள்ளங்கைகளால் சுமார் 6,000 முறை அடிக்க வேண்டியிருந்தது. இதன் விளைவாகவே எனது உள்ளங்கைகள் சுத்தியல்களை விட வலிமையானதாக மாறின” என்று விளக்குகிறார்.
மேலும், குங்-ஃபூ திரைப்படங்களில் காட்டுவது போலச் சூடான மணல் நிரம்பிய பாத்திரத்தில் கைகளைப் புதைப்பது என்பது முற்றிலும் கற்பனையான சினிமாத்தனமான அபத்தம் என்றும், நிஜமான கடின உழைப்பும் வலியும் மட்டுமே கைகளை எஃகு போல வலிமையாக்க முடியும் என்றும் அவர் திரையுலகப் பொய்யை அம்பலப்படுத்தியுள்ளார்.
இந்தப் பயிற்சியின் போது கைகள் பெரிய அளவில் சேதமடையாமல் இருக்க, அவரது குரு வழங்கிய பாரம்பரிய மருத்துவ மதுவும் ஒரு முக்கியப் பங்காற்றியுள்ளது. அது அவரது கைகளைப் பாதுகாத்து, எலும்புகளை விரிவடையச் செய்யவும் உதவியது. தற்போது ஜாங்கின் இந்த 3 அங்குலத் தடிமனான உள்ளங்கைகள் வெறும் காட்சிப் பொருளாக மட்டும் இல்லை; தற்காப்புக் கலைக் கண்காட்சிகளில், அவரால் வெறும் கைகளால் பெரும் செங்கல் குவியல்களை உடைக்கவும், தடிமனான மரப் பலகைகளில் இரும்பு ஆணிகளைச் சுத்தியல் இல்லாமல் அடிக்கவும் முடியும்.
இந்த இணையற்ற வலிமையின் காரணமாக, 2006 முதல் 2010 வரை தொடர்ச்சியாக ஐந்து தேசிய தற்காப்புக் கலைப் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள ஜாங், இன்று உலகின் தலைசிறந்த குங்-ஃபூ குருக்களில் ஒருவராகக் கொண்டாடப்படுகிறார்.
