பிலிப்பைன்ஸின் பம்பாங்கா, சாண்டோ டோமஸ் பகுதியில் உள்ள ஒரு சவப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில், காரை ஓட்டுவதற்கு உள்ளே டிரைவரே இல்லாத நிலையிலும், வாகனம் திடீரென தானாகவே முன்னோக்கி நகர்ந்து ஓடிய விசித்திரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளின்படி, அந்தத் தொழிற்சாலையின் கேரேஜ் பகுதியில் ஊழியர்கள் சிலர் ஒன்றாக அமர்ந்து ஜாலியாக மது அருந்திக் கொண்டிருந்துள்ளனர்.

அப்போது, அங்கே நிறுத்தப்பட்டிருந்த ஒரு வாகனம், எவ்வித இயக்கமும் இன்றி திடீரென தானாகவே ஸ்டார்ட் ஆகி முன்னோக்கி நகரத் தொடங்கியுள்ளது. ​காரின் உள்ளே யாருமே இல்லாத சூழலில், அது திடீரென நகர்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், விபத்தில் சிக்காமல் இருக்க அலறியடித்துக் கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர்.

பின்னர், நிலைமையை உணர்ந்த சில தைரியமான ஊழியர்கள், ஓடிக்கொண்டிருந்த காரின் கதவைத் திறந்து உள்ளே சென்று, கியரை நியூட்ரல் (Neutral Mode) நிலைக்கு மாற்றி ஒருவழியாக வாகனத்தை நிறுத்தியுள்ளனர். நல்வாய்ப்பாக இந்த விசித்திரமான விபரீத சம்பவத்தில் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை என்றாலும், சவப்பெட்டி செய்யும் இடத்தில் இந்த பயங்கர சம்பவம் நடந்தது அங்கிருந்தோரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.