சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் கடந்த நிலையில், பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள குண்டா கிராமத்தைச் சேர்ந்த லோரி பால் என்பவரது குடும்பத்திற்கு முதன்முறையாக மின்சார வசதி கிடைத்துள்ளது.

நக்சல் பாதிப்பு மிகுந்த இப்பகுதியில் வசிக்கும் இக்குடும்பம், வறுமை மற்றும் விழிப்புணர்வு இன்மை காரணமாகப் பல தசாப்தங்களாக இருளிலேயே வாழ்ந்து வந்தது.

கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வரும் லோரி பால், தனது குடும்பத்தை வறுமையின் பிடியில் இருந்து காக்கப் போராடி வந்த நிலையில், மின்சார இணைப்பு பெறுவது என்பது அவர்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்தது.

தங்களது நீண்டகாலத் தேடலுக்குப் பிறகு மின்சாரத் துறைக்கு விண்ணப்பித்து, 25 நாட்களுக்குள் மின் இணைப்பு கிடைத்தபோது, லோரி பாலின் குடும்பத்தினர் மெய்சிலிர்த்துப் போய் ஆனந்தக் கண்ணீர் சிந்தினர்.

தங்கள் வீட்டில் முதன்முதலாக மின்விளக்கு ஒளிர்ந்த அந்தத் தருணத்தில், அவர்கள் இறைவனுக்கு நன்றி தெரிவித்து நெகிழ்ச்சியுடன் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.

பல ஆண்டுகளாக இருளில் வாழ்ந்த அந்தக் குடும்பத்திற்கு இப்போது கிடைத்திருக்கும் இந்த ஒளி, அக்கிராம மக்கள் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.