அரசு கேபிள் டிவியில் பாலிமர் நியூஸ், நியூஸ் தமிழ் 24×7, தமிழ் ஜனம் ஆகிய மூன்று முக்கியச் செய்தி சேனல்களின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்ட விவகாரம், தமிழ்நாட்டு அரசியல் களத்தில் தற்பொழுது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. த.வெ.க அரசின் அவலநிலையைத் தொடர்ந்து விமர்சித்து வந்ததாலேயே இந்தச் சேனல்கள் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ் மற்றும் அண்ணாமலை உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் த.வெ.க அரசுக்கு எதிராகக் கடுமையான கண்டனங்களை முன்வைத்தனர்.
ஆனால் இக்குற்றச்சாட்டுகளைமுற்றிலுமாக மறுத்த தமிழக அரசு, சேனல்கள் எதுவும் நீக்கப்படவில்லை என்றும், சில செட்-டாப் பாக்ஸ்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாகவே தற்காலிகமாக ஒளிபரப்பு செய்ய இயலவில்லை என்றும், அதனைச் சரிசெய்யும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருவதாகவும் அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளது.
அரசின் இந்த விளக்கத்தை அடியோடு நிராகரித்துக் கடுமையாகச் சாடியுள்ள அண்ணாமலை, “த.வெ.க ஆட்சியின் அவலங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஊடகங்களுக்கு மட்டும்எப்படித் திடீரென செட்-டாப் பாக்ஸில் தொழில்நுட்பப் பிரச்சனை வரும்?” என எக்ஸ் தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், கடந்த தி.மு.க ஆட்சியில் பொய்களை உண்மை என நம்ப வைக்க உருவாக்கப்பட்ட வலைத்தளம், தற்போதைய த.வெ.க ஆட்சியிலும் அதே ஏமாற்று வேலையைத் தொடர்வதாகக் குறிப்பிட்ட அவர், “அதே டெய்லர், அதே வாடகை, கன்னத்தில் மரு மட்டும் புதியது” என முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய ஆட்சியை மிகக் காட்டமாக விமர்சித்துள்ளார்.
கடந்த வாரம் பா.ஜ.க-விலிருந்து விலகி ‘வி தி லீடர்ஸ்’ என்ற புதிய இயக்கத்தைத் தொடங்கி, குறுகிய காலத்தில் 17 லட்சம் உறுப்பினர்களைச் சேர்த்துள்ள அண்ணாமலை, மாற்று அரசியல் என்ற கோஷத்துடன் ஆட்சியைப் பிடித்த த.வெ.க-விற்கு எதிராகத் தனது அரசியல் விமர்சனங்களை இனிவரும் நாட்களில் மிகக் கூர்மையாக்கத் தொடங்கியுள்ளார் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
