அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசின் செயல்பாடுகள் மற்றும் ஊடக சுதந்திரம் முடக்கப்படுவது குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அரசு கேபிள் டிவியில் சில முன்னணி தமிழ் செய்திச் சேனல்களின் ஒளிபரப்பு திடீரென நிறுத்தப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், நிர்வாகத்தில் நடக்கும் குளறுபடிகளைப் பற்றிப் பேசுவதற்குக் கூட இங்கே ஏதாவது “சென்சார் போர்டு” இருக்கிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனால் ஜனநாயகத்தின் முக்கியத் தூணாக விளங்கும் ஊடகங்களை மிரட்டும் தொனியில் தனியார் நிறுவனங்கள் மூலம் முடக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது என்றும், தங்களுக்கு எதிராக வரும் விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ள முடியாமல் இதுபோன்ற பழிவாங்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் அரசின் நிர்வாகத் திறமையின்மை, மின்வெட்டுப் பிரச்சினைகள் மற்றும் மக்கள் சந்திக்கும் அன்றாடத் துயரங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஊடகங்களின் குரல்வளையை நசுக்கப் பார்ப்பது முறையற்றது என்று எடப்பாடி பழனிசாமி மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் முடக்கப்பட்ட செய்திச் சேனல்களின் ஒளிபரப்பை எவ்விதத் தடையுமின்றி உடனடியாக மீண்டும் தொடர அரசு கேபிள் டிவி நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். கருத்துச் சுதந்திரத்திற்கும், ஊடகங்களின் உண்மைத் தன்மைக்கும் சவாலாக விளங்கும் இதுபோன்ற அடக்குமுறைகள் ஜனநாயக ஆட்சியில் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று தனது கண்டனத்தை அவர் ஆணித்தரமாகப் பதிவு செய்துள்ளார்.
