அமெரிக்காவில் நடைபெற்று வரும் 2026 NBA கூடைப்பந்து இறுதிப்போட்டியின் 3-வது ஆட்டத்தில், நியூயார்க் நெக்ஸ் மற்றும் சான் ஆண்டோனியோ ஸ்பர்ஸ் அணிகள் மோதின. நியூயார்க்கின் புகழ்பெற்ற மேடிசன் ஸ்கொயர் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியை, நெக்ஸ் அணியின் உரிமையாளர் ஜேம்ஸ் டோலனின் அழைப்பை ஏற்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேரில் வந்து ரசித்தார். இதன்மூலம், பதவியில் இருக்கும்போதே NBA இறுதிப்போட்டியை நேரில் பார்த்த முதல் அமெரிக்க அதிபர் என்ற வரலாற்றுப் பெருமையை டிரம்ப் பெற்றார். போட்டி தொடங்குவதற்கு முன் மைதானத்தின் பிரம்மாண்ட திரையில் டிரம்ப் தோன்றியபோது, ரசிகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்கள் எழுந்தன. ஒருபுறம் அவருக்கு எதிர்ப்புக் குரல்களும், மறுபுறம் ‘யுஎஸ்ஏ’ என்ற கோஷங்களும் மைதானத்தை அதிரவைத்தன.

மைதானத்தில் இத்தகைய பரபரப்பு நிலவிய வேளையில், போட்டியின் இடையே அதிபர் டிரம்ப் தனது பிரத்யேக இருக்கையில் அமர்ந்தபடி கண்களை மூடி தூங்குவது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது. போட்டிக்கு முன்பு செய்தியாளர்களிடம் தான் மிகுந்த உற்சாகத்துடன் இருப்பதாகக் கூறிய டிரம்ப், ஆட்டத்தின் நடுவே அயர்ந்து தூங்கியதை நெட்டிசன்கள் மீம்ஸ்கள் போட்டு கடுமையாக கலாய்த்து வருகின்றனர்.

இதற்கிடையில், களத்தில் நடந்த போட்டியில் சான் ஆண்டோனியோ ஸ்பர்ஸ் அணியின் நட்சத்திர வீரர் விக்டர் வெம்பன்யாமா அதிரடியாக விளையாடி ஆரம்பத்தில் முன்னிலை பெற்றுத் தந்தாலும், நியூயார்க் நெக்ஸ் அணியின் ஜாலன் பிரன்சன் மற்றும் கார்ல்-ஆண்டனி டவுன்ஸ் ஆகியோர் ஆட்டத்தை தங்கள் பக்கமாக திருப்பினர். இறுதியில் நியூயார்க் நெக்ஸ் அணி அபார வெற்றி பெற்று, தொடரில் 3-0 என்ற கணக்கில் பலத்த முன்னிலை வகிக்கிறது. இதன்மூலம் 1973-க்குப் பிறகு தனது முதல் சாம்பியன் பட்டத்தை வெல்லும் வரலாற்று வாய்ப்பை நியூயார்க் நெக்ஸ் அணி நெருங்கியுள்ளது.