இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான யுவஜேந்திர சஹால், கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் தொடர்களில் மட்டுமே தீவிரமாக விளையாடி வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய சஹால், 14 போட்டிகளில் 12 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
தற்போது இந்திய அணியின் டெஸ்ட், ஒருநாள் அல்லது டி20 போட்டிகளுக்கான அணியில் அவருக்கு இடம் கிடைக்காததால், ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு அவர் ஓய்வில் உள்ளார்.
இந்நிலையில், சஹால் சாலையோரம் அமர்ந்து பிச்சை எடுப்பது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், இந்த வீடியோவின் பின்னணியில் உள்ள உண்மை வேறு. இது சஹாலும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானும் இணைந்து இன்ஸ்டாகிராமிற்காக ஜாலியாக உருவாக்கிய ஒரு ‘ரீல்ஸ்’ (Reels) வீடியோ ஆகும். அதில் சாலையோரம் அமர்ந்து பிச்சை எடுப்பது போல் சஹால் நடிக்க, அதைப் பார்த்து அதிர்ச்சியடையும் ஷிகர் தவான், “உனக்கு வெட்கமாக இல்லையா? இப்படி ரோட்டில் உட்கார்ந்து காசு கேட்கிறாய்?” என்று கேலியாகக் கோபப்படுகிறார்.
View this post on Instagram
அதற்கு சஹால், “உன்னுடைய 10 ரூபாய்க்காக நான் என்ன ஆபீஸ் திறந்தா உட்கார முடியும்?” என்று நக்கலாகப் பதிலளிக்கிறார். இந்திய அணிக்காக 72 ஒருநாள் மற்றும் 80 டி20 போட்டிகளில் விளையாடி, முறையே 121 மற்றும் 96 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள சஹால், கடந்த 2023 ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
