தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள இடையாத்தி கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜா-அட்சயா தம்பதியினரின் குடும்பத் தகராறு, தற்போது கத்திக்குத்து மற்றும் அடுத்தடுத்த வீடியோ வெளியீடுகளால் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அட்சயாவுக்கு ஜோஸ் என்ற வாலிபருடன் பழக்கம் இருந்ததாகக் கூறி, அவர்கள் இருவரும் வீட்டில் தனியாக இருந்தபோது தர்மராஜா அங்கு சென்று வாக்குவாதம் செய்து, அந்த வாலிபரை அடித்து விரட்டிய வீடியோ அண்மையில் வைரலானது.

இந்த மோதலின் உச்சகட்டமாக, அட்சயாவுக்கு முகத்தில் கத்திக்குத்து விழுந்த நிலையில், தர்மராஜா தனது 4 வயது மகனுடன் தலைமறைவானார். உடனடியாகச் செயல்பட்ட போலீஸார், குழந்தையை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்ததுடன், தர்மராஜாவைக் கொலை முயற்சி வழக்கில் அதிரடியாகக் கைது செய்தனர்.

இச்சம்பவத்தில் காயமடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அட்சயா, தற்போது மருத்துவமனையில் இருந்தபடியே வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் புதிய புயலைக் கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், “தற்போது பரப்பப்படும் வீடியோ அண்மையில் எடுத்தது அல்ல, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் எடுக்கப்பட்டது; நான் வேலைக்குச் செல்லக் கூடாது என்பதற்காக என் கணவர் எனக்கு மொட்டை அடித்து சித்திரவதை செய்தார், கோபம் வந்தால் என்னை மிகக் கொடூரமாக அடிப்பார்” என்று அட்சயா பகீர் குற்றச்சாட்டுகளைப் சுமத்தியுள்ளார்.

மேலும், கணவரின் கொடுமை தாங்காமல் கடந்த ஓராண்டாகப் பிரிந்து விடுதியில் தங்கி வாழ்வதாகவும், தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி தர்மராஜா சிகரெட்டால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு மிரட்டியதாகவும் அட்சயா கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவால் இந்த வழக்கில் தற்போது அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.