ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை மீண்டும் எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுத்துள்ளது. பாதுகாப்புச் சபையின் வருடாந்திர அறிக்கை குறித்த விவாதத்தின் போது, பாகிஸ்தான் தூதர் ஆசிம் இப்திகார் அகமது காஷ்மீர் குறித்துப் பேசினார்.
இதற்குப் பதிலளித்த இந்திய தூதர் பர்வதநேனி ஹரிஷ், ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும், சர்வதேச மேடைகளைத் தவறான பிரச்சாரங்களுக்குப் பயன்படுத்துவதை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் திட்டவட்டமாகக் கூறினார்.
ஜம்மு-காஷ்மீர் எப்போதுமே இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதி என்று குறிப்பிட்ட அவர், பாகிஸ்தானின் குறுகிய அரசியல் லாபங்களுக்கான இந்த முயற்சி தேவையற்றது மற்றும் தவறானது என்று சாடினார்.
தற்போது பாதுகாப்புச் சபையின் தற்காலிக உறுப்பினராக இருக்கும் பாகிஸ்தான், சர்வதேச அமைதியையும் பாதுகாப்பையும் வலுப்படுத்துவதற்குப் பதிலாக, தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலம் தனது பொறுப்பைத் தவறாகப் பயன்படுத்துவதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், ஐநா பாதுகாப்புச் சபையில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் இந்தியா மீண்டும் வலியுறுத்தியது.
தற்போதைய பாதுகாப்புச் சபையின் கட்டமைப்பு 1945-ஆம் ஆண்டின் சூழ்நிலையைப் பிரதிபலிப்பதாகக் கூறிய இந்திய தூதர், உலகளாவிய அதிகார சமநிலையை உறுதிப்படுத்தவும், வளரும் நாடுகளின் குரலைப் பிரதிபலிக்கவும் ஏதுவாகப் பாதுகாப்புச் சபையின் நிரந்தர மற்றும் தற்காலிக உறுப்பினர்களின் எண்ணிக்கையை 25 அல்லது 26 ஆக உயர்த்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.
