சர்வதேச அளவில் பெரும் பதற்றம் நிலவி வரும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைப் பகுதியில், இஸ்ரேலிய ராணுவத்தின் மனிதாபிமானமற்ற அத்துமீறல் காரணமாகப் பொதுமக்கள் மத்தியில் அச்சம் மேலும் அதிகரித்துள்ளது. மேற்குக் கரையின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஹெப்ரான் நகரின், ‘டெல் ருமைடா’ என்ற இடத்தில் ஜூன் 5-ஆம் தேதியன்று ஒட்டுமொத்த மனிதநேயத்தையும் உலுக்கும் வகையிலான ஒரு துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

பெத்லகேம் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக (பேராசிரியராக) பணியாற்றி வரும் ஃபஹத் என்பவர், தனது குடும்பத்தினருடன் காரில் பயணம் செய்துகொண்டிருந்த போது இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.பேராசிரியர் ஃபஹத், தனது மனைவி மற்றும் இவர்களது 7 மாதமே ஆன பச்சிளம் குழந்தையான சாம் ஃபஹத் அபு ஹைகல் ஆகியோருடன் ஹெப்ரான் நகரில் வசிக்கும் தங்களது நெருங்கிய உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்.

இவர்களது வாகனம் டெல் ருமைடா பகுதியை அடைந்த தறுவாயில், அங்கு ஆயுதங்களுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இஸ்ரேலிய ராணுவ வீரர்கள், எவ்வித முன்னறிவிப்போ அல்லது காரணமோ இன்றி, திடீரென அந்த காரை நோக்கி இலக்கு வைத்து நேரடியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். தோட்டாக்கள் காரைப் பாய்ந்து சென்றதில் அந்த இடமே பெரும் போர்க்களமாக மாறியது.

காரில் ஒரு பேராசிரியரும், அவரது மனைவியும், உலகமே அறியாத 7 மாதக் கைக்குழந்தையும் இருக்கிறார்கள் என்பதைக் கூடச் சற்றும் பொருட்படுத்தாமல் இஸ்ரேல் ராணுவம் நடத்திய இந்தத் துணிச்சலான தாக்குதலில் அந்த பச்சிளம் குழந்தை பலி ஆனது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அப்பாவிப் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட இந்த அராஜகத் துப்பாக்கிச் சூடு, மேற்குக் கரைப் பகுதியில் வாழும் பாலஸ்தீன மக்களின் அன்றாடப் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும், சர்வதேச சமூகத்தின் கண்டனங்களையும் மீண்டும் பலமடங்கு தீவிரப்படுத்தியுள்ளது.