உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள புகழ்பெற்ற ‘துளசி உத்யன்’ பூங்காவிற்குச் சென்ற இளம் ஜோடி ஒன்றை, துறவிகள் (சாதுக்கள்) உடையில் இருந்த நான்கு பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டித் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “இங்கு வர உங்களுக்கு யார் அனுமதி கொடுத்தது?” என்று சத்தமிட்டபடி, அந்த ஜோடியை அக்கும்பல் கடுமையான வார்த்தைகளால் திட்டி, உடல்ரீதியாகத் தாக்கியுள்ளது. பூங்காவில் இருந்த பொதுமக்களில் சிலர் இச்சம்பவத்தைத் தங்களது மொபைல் போனில் வீடியோவாகப் பதிவு செய்ய, அது தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

இந்த விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, உடனடியாக விசாரணையில் இறங்கிய அயோத்தி காவல்துறை, இத்தாக்குதலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் இருவரைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. பூங்காவில் அந்த ஜோடியின் நடத்தை பொதுவெளிக்கு உகந்ததாக இல்லை என்பதால் தாங்கள் தட்டிக்கேட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனினும், இந்த வன்முறைச் சம்பவத்திற்குப் பல ஆன்மீகப் பெரியவர்களும், மதத் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஒருவேளை தவறு ஏதேனும் நடந்திருந்தால் அவர்களுக்கு அறிவுரை கூறி நெறிப்படுத்தியிருக்க வேண்டுமே தவிர, சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு இப்படிப் பொதுவெளியில் அராஜகமாகத் தாக்குதல் நடத்தியது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.