தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் களம் பெரும் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றி கழகத்திற்கு’ (தவெக) காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்திருப்பது திமுகவை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தங்களுக்குப் பலவழிகளிலும் தோள் கொடுத்த காங்கிரஸ் கட்சி, தவெக-வுடன் கைகோர்த்து தங்களை முதுகில் குத்தி துரோகம் இழைத்துவிட்டதாக திமுக பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது.

இதன் எதிரொலியாக, டெல்லியில் ஜூன் 8-ஆம் தேதி நடைபெற உள்ள ‘இந்தியா’ (INDIA) கூட்டணியின் மிக முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்பதால், அக்கூட்டத்தை முற்றிலுமாகப் புறக்கணிப்பதாக திமுக அதிரடியாக அறிவித்துள்ளது.  இந்த அதிரடி முடிவால் தேசிய அளவில் ‘இந்தியா’ கூட்டணியில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து ‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான உத்தவ் சிவசேனா கட்சி தனது முக்கியக் கருத்தைத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்பியுமான சஞ்சய் ராவத் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்தியா கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாகக் கூறுவது முற்றிலும் தவறான தகவல். தமிழக தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுக மட்டுமே கூட்டணியில் இருந்து சற்று விலகி நிற்கத் தொடங்கியுள்ளது.

ஆனால், அதற்குப் பதிலாக தமிழகத்தில் எங்களுக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ (தவெக) என்ற வலுவான மாற்று நண்பர் கிடைத்துள்ளார். அதிமுகவால் காலியான மாநிலங்களவை எம்பி சீட்டைக் கூட தவெக ஒதுக்கீடு மூலம் காங்கிரஸ் பெற்றுள்ளது. எனவே, இதை கூட்டணியின் பிளவு என்று சொல்வதை விட, இந்தியா கூட்டணிக்கு ஒரு மாற்றுப் பலம் கிடைத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்” என அதிரடியாகக் கூறியுள்ளார். மேலும், டெல்லி கூட்டத்தில் தங்கள் கட்சியின் சார்பில் யார் பங்கேற்பார்கள் என்பதை உத்தவ் தாக்கரே விரைவில் அறிவிப்பார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.