நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு எதிரே இருக்கும் ஜெராக்ஸ் கடைக்கு நேற்று முன்தினம் சென்றுள்ளார். அப்போது கடையின் உரிமையாளரான முகமது அஸ்ரப் அலி, அந்தப் பெண்ணுக்குத் தெரியாமல் தனது செல்போன் மூலம் அவரை ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், உடனடியாக தனது குடும்பத்தினரிடம் கூறவே, அவர்கள் கடைக்கு வந்து உரிமையாளரிடம் விசாரித்துள்ளனர். இதனால் பயந்துபோன முகமது அஸ்ரப் அலி, தனது செல்போனை அங்கேயே போட்டுவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பியோடி தலைமறைவானார்.
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் அந்த செல்போனுடன் பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் தலைமையிலான போலீசார் அந்த செல்போனை ஆய்வு செய்தபோது, அதில் கடைக்கு ஜெராக்ஸ் எடுக்க வந்த 200-க்கும் மேற்பட்ட பெண்களை அவர்களுக்குத் தெரியாமல் ஆபாசமாக வீடியோ எடுத்துச் சேமித்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு போலீசாரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதையடுத்து, பெண்களின் கண்ணியத்திற்குப் பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த முகமது அஸ்ரப் அலியை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
