மத்தியப் பிரதேச மாநிலத்தின் ரத்லாம் (Ratlam) பகுதியில் உள்ள செமாலியா கிராமத்தில், 33 வயதான ராகேஷ் சௌஹான் என்ற வாலிபர் தனது மனைவி மற்றும் அவரின் குடும்பத்தினர் கொடுத்த கடுமையான மன உளைச்சல் காரணமாகத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தான் இறப்பதற்கு முன்னதாக மோட்டார் சைக்கிளில் சென்றபடியே ராகேஷ் செல்போனில் பதிவு செய்த உருக்கமான வீடியோ தற்போது வெளியாகிப் பார்ப்போரை உலுக்கியுள்ளது.

அந்த வீடியோவில், தனது மனைவி ரூபி, மைத்துனி ரீனா மற்றும் அவரின் கணவர் அந்தர் சிங் ரத்தோர் ஆகிய மூவரும்தான் தனது மரணத்திற்குக் காரணம் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். தனது மனைவி தனது வாழ்க்கையையே அழித்துவிட்டதாகவும், அவர் கேட்ட பணத்தையெல்லாம் தான் கொடுத்து வந்த நிலையில், சமீபத்தில் கூட அவரின் கணக்கிற்கு 2 லட்சம் ரூபாய் அனுப்பியதாகவும், அதற்கான ஆதாரங்களைத் தனது வங்கி கணக்கில் சரிபார்த்துக் கொள்ளலாம் என்றும் அவர் கண்ணீருடன் பேசியுள்ளார்.

மேலும், தனது மரணத்திற்குப் பிறகு தனது சொத்துக்கள் அனைத்தும் தனது மகன் சூர்யா சௌஹானுக்குச் சேர வேண்டும் என்றும் அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை மாலை வீட்டை விட்டுச் சென்ற ராகேஷ் மீண்டும் வராததால், குடும்பத்தினர் தேடியபோது அங்குள்ள வேப்பமரத்தில் அவர் பிணமாகத் தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

ராகேஷ் மற்றும் ரூபிக்கு கடந்த 2005-ஆம் ஆண்டே திருமணமாகி நீண்ட நாட்களாக விவாகரத்து வழக்கு நடந்து வந்ததும், முன்னதாக ராகேஷ் மீது அவரின் மனைவி தாக்குதல் புகார் அளித்திருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது இந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் ராகேஷின் குடும்பத்தினர் அளித்த புகாரை அடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.