அமெரிக்காவின் ‘பிராண்டியர் ஏர்லைன்ஸ்’ (Frontier Airlines) விமானம் ஒன்றில், நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது பயணி ஒருவர் செய்த விபரீத செயலால் ஒட்டுமொத்த விமானமும் நிலைகுலைந்து, பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மே 31-ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவத்தில், அந்தப் பயணி திடீரென எழுந்து சென்று, “நான் இப்போதே கீழே இறங்க வேண்டும்” எனக் கூச்சலிட்டபடி, விமானத்தின் அவசரக் கால எமர்ஜென்சி கதவைத் (Emergency Exit) திறக்க முயன்றுள்ளார்.

அதுமட்டுமில்லாமல், விமானப் பணிப்பெண்களின் பேச்சைக் கேட்காமல் பைலட் அறைக்குள்ளும் (Cockpit) நுழைய முயன்றதுடன், தன்னைத் தடுக்க வந்த ஒரு ஊழியரைத் தாக்கி அவரின் பையையும் பறித்துக்கொண்டு பெரும் வன்முறையில் ஈடுபட்டுள்ளார். இதனால் விமானத்திற்குள் இருந்த பயணிகள் அலறியடித்துக் கூச்சலிட, அங்கிருந்த சக பயணிகளில் ஒருவரான பிரபல ‘எம்எம்ஏ’ (MMA) சண்டை வீரர் மற்றும் பிரேசிலிய ஜியு-ஜித்சு பிளாக் பெல்ட் சாம்பியன், தனது அசாத்திய தைரியத்தால் அந்தப் பயணியை மடக்கிப் பிடித்து, அவரின் கைகளைக் கட்டி இருக்கையில் அதிரடியாக அமுக்கி உட்காரவைத்தார்.

இந்த விபரீத மோதலால், உடனடியாக விமானம் மியாமி சர்வதேச விமான நிலையத்திற்குத் (Miami International Airport) திசைதிருப்பப்பட்டு, இரவு 11:55 மணியளவில் அவசரமாகத் தரை இறக்கப்பட்டு, அந்தப் பயணியைப் பாதுகாப்புப் படையினர் அதிரடியாகக் கைது செய்தனர்.

நடுவானில் நூலிழப்பில் பெரும் விபத்தைத் தடுத்த அந்த எம்மமஏ ஃபைட்டரின் சாதுரியமான வீரத்தை நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் வீடியோவாகப் பகிர்ந்து பாராட்டி வருவதுடன், விமானங்களில் இது போன்ற ஆசாமிகளைக் கட்டுப்படுத்த முறையான பாதுகாப்பு உபகரணங்கள் ஏன் இல்லை என்ற காரசாரமான விவாதத்தையும் கிளப்பியுள்ளனர்.