மேற்கு வங்க மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட ரிதபத்ரா பானர்ஜியை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக அம்மாநில பேரவைத் தலைவர் (சபாநாயகர்) அங்கீகரித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில்  திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், அக்கட்சியின் முக்கிய நிர்வாகியாக இருந்த ரிதபத்ரா பானர்ஜிக்கும் இடையே நிலவி வந்த உட்கட்சிப் பூசல் காரணமாக, அவர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இந்தச் சூழலில், சட்டமன்ற அரசியல் களத்தில் யாரும் எதிர்பாராத ஒரு திடீர் திருப்பமாக அவர் எதிர்க்கட்சித் தலைவராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மேற்கு வங்க சட்டமன்றத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 80 சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ.க்கள்) உள்ளனர். இந்நிலையில், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ரிதபத்ரா பானர்ஜி, தமக்கு ஆதரவாக 60 சட்டமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட ஆதரவுக் கடிதத்தை அம்மாநில சபாநாயகரிடம் நேரில் அளித்திருந்தார்.

ரிதபத்ரா பானர்ஜி சமர்ப்பித்த கடிதத்தையும், அவரிடம் உள்ள பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் ஆய்வு செய்த பேரவைத் தலைவர், அதனை முறைப்படி ஏற்றுக்கொண்டார். அதன் அடிப்படையில், ரிதபத்ரா பானர்ஜியை மேற்கு வங்க சட்டமன்றத்தின் புதிய எதிர்க்கட்சித் தலைவராக சபாநாயகர் முறைப்படி அங்கீகரித்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 15 வருடங்களுக்குப் பிறகு பாஜக ஆட்சியைப் பிடித்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெறும் பின்னடைவை சந்தித்தது. மேலும் இந்த நிலையில் தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்த நிலையில் மம்தா பானர்ஜி பக்கம் 20 எம்எல்ஏக்கள் மட்டுமே இருக்கிறது குறிப்பிடத்தக்கது.