ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் தனது அதிரடி பேட்டிங் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பீகாரைச் சேர்ந்த 15 வயது இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷி, தற்போது விராட் கோலியுடன் அவர் நடத்திய உரையாடல் மூலம் மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார். அகமதாபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் இறுதிப்போட்டியின் போது, இந்திய கிரிக்கெட்டின் முன்னணி நட்சத்திரமான விராட் கோலியை வைபவ் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது வைபவ், விராட் கோலியைக் கண்டதும் கைகூப்பி ‘நமஸ்தே’ கூறி மரியாதை செலுத்திய விதம் ரசிகர்களைக் கவர்ந்தது. இந்த சந்திப்பின் போது விராட் கோலி, வைபவ் தோளில் கைபோட்டு இரண்டு முறை கை குலுக்கி, “நன்றாக விளையாடினாய் இளம் வீரரே” என்று பாராட்டிய 47 வினாடி வீடியோ முன்னதாக ஐபிஎல் பக்கத்தில் வெளியாகி இருந்தது.

 

இந்நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி தற்போது வெளியிட்டுள்ள புதிய வீடியோவில், அவ்விருவருக்கும் இடையே நடந்த சுவாரசியமான முழு உரையாடல் அம்பலமாகியுள்ளது. அதில் விராட் கோலி, “நீ இங்கிருந்து இன்னும் உயரத்திற்குச் செல்ல வேண்டும். இதுவரை நீ சாதித்தது உன்னுடைய கடின உழைப்பால் கிடைத்தது. உன்னைப் பற்றி யார் என்ன பேசுகிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படாமல், அதை ஓரமாகத் தூக்கிப் போடு” என்று அறிவுரை வழங்கியுள்ளார்.

 

மேலும், “ஒரு பிகாரி எல்லாரையும் மிஞ்சிருவான் அத்தோடு ஆட்டம் முடிந்தது!” என்று விராட் கோலி புன்னகையுடன் கூற, வைபவ்வும் நெகிழ்ச்சியுடன் சிரித்துள்ளார். ஐபிஎல் தொடருக்குப் பிறகு வைபவ் ஜூன் 9 முதல் இலங்கையில் நடக்கும் முத்தரப்பு தொடருக்கான இந்தியா ‘ஏ’ அணியிலும், விராட் கோலி ஜூன் 13 முதல் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் களம் காண உள்ளது குறிப்பிடத்தக்கது.