அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகளில் வரும் ஜூன் 11-ஆம் தேதி முதல் ஜூலை 19-ஆம் தேதி வரை 23-ஆவது உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற உள்ளன. மொத்தம் 48 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில், மெஸ்சி, எம்பாப்பே போன்ற உலகின் முன்னணி நட்சத்திரங்கள் களம் காண உள்ளனர். உலக தரவரிசையில் இந்திய அணி இதுவரை 94-ஆவது இடத்தையே தனது சிறந்த நிலையாகப் பெற்றிருந்ததால், இந்த முறையும் உலகக்கோப்பைக்குத் தகுதி பெறவில்லை. இருப்பினும், இம்முறை உலகக்கோப்பை தொடரில் பல்வேறு நாடுகளின் சார்பாக 4 இந்திய வம்சாவளி வீரர்கள் களம் இறங்க இருப்பது இந்திய ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதில் குறிப்பாக இரண்டு வீரர்கள் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்பது தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது. ஆஸ்திரேலிய அணியில் விளையாடும் 25 வயது நடுகள வீரரான நிஷான் வேலுப்பிள்ளையின் தந்தை இலங்கை வம்சாவளித் தமிழர் ஆவார். அதேபோல், ஆப்பிரிக்க நாடான காங்கோ அணியின் பின்கள வீரரான 29 வயது சாமுவேல் மோட்டுசமியின் தந்தையும் தமிழக வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன்,கேரளாவைச் சேர்ந்த கத்தார் அணியின் 19 வயது இளம் வீரர் தாஹ்சின் ஜம்ஷித் மற்றும் பஞ்சாபை பூர்வீகமாகக் கொண்ட நியூசிலாந்து அணியின் 27 வயது வீரர் சர்பிரீத் சிங் ஆகியோரும் இந்த உலகக்கோப்பைத் தொடரில் விளையாடி இந்தியாவிற்குப் பெருமை சேர்க்கக் காத்துள்ளனர்.