இந்தியாவின் அதிநவீன ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரயிலின் தூய்மை, அமைதி மற்றும் உலகத்தரம் வாய்ந்த நவீன வசதிகளைப் பாராட்டி, முதன்முறையாக அதில் பயணித்த பிரிட்டிஷ் குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இன்ஸ்டாகிராமில் ‘தி ஹட்சின்சன் ஃபேமிலி’  என்ற பெயரில் அறியப்படும் 5 பேர் கொண்ட இந்த லண்டன் குடும்பத்தினர், டெல்லியிலிருந்து ஜெய்ப்பூருக்கு வந்தே பாரத் ரயில் மூலம் பயணித்தனர். ரயிலுக்குள் நுழைந்ததுமே அதன் அசாத்திய தூய்மை, அமைதியான சூழல் மற்றும் பயணிகளின் கனிவான நடத்தை ஆகியவை தங்களை வியப்பில் ஆழ்த்தியதாக அக்குடும்பத்தின் தாய் தெரிவித்துள்ளார். மேலும், இருக்கைகளுக்கு அருகே உள்ள பிரத்யேக மேஜை வசதிகள், லக்கேஜ் வைப்பதற்கான போதுமான இடவசதி மற்றும் மொபைல் சார்ஜிங் பாயிண்டுகள் தங்களுக்குப் பெரும் உதவியாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by The Hutchinsons (@thehutchinsonfamily)

சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலான இந்த சொகுசுப் பயணத்திற்கு, ஒரு நபருக்கு வெறும் 11 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் ₹1,400) மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். பயணத்தின் போது ரயிலில் வழங்கப்பட்ட இலவச குடிநீர் பாட்டில்கள், சுவையான கச்சோரி, மாம்பழ சாறு, பாப்கார்ன் மற்றும் சூடான இஞ்சி டீ போன்ற தரமான உணவுப் பொருட்கள் தங்களின் எதிர்பார்ப்பை விட மிகச் சிறப்பாக இருந்ததாக அக்குடும்பத்தினர் பாராட்டியுள்ளனர். சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்ட இந்த வீடியோ, தற்போது 45 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து உலகளவில் இந்திய ரயில்வேயின் நவீன முகத்திற்குப் பெரும் பெருமை சேர்த்துள்ளது.