பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில், இளம் பெண் ஒருவர் போனைப் பார்த்துக்கொண்டே சாலையில் நடந்து சென்ற போது, எதிர்பாராதவிதமாகப் பாதாள சாக்கடை மூடி சரிந்து அதற்குள் விழுந்த அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வெளியாகி பார்ப்போரை உறைந்துபோகச் செய்துள்ளது. ஃபபியானா ரோசா (32) என்ற அந்த பெண், பைக் டாக்ஸியில் இருந்து இறங்கி நடந்து சென்றபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது.

அவர் மூடி மீது கால் வைத்த அடுத்த நொடியே, அந்த இரும்பு மூடி தலைகீழாக மாற, அவர் நேராக 10 அடி ஆழமுள்ள பாதாள சாக்கடைக்குள் விழுந்து மறைந்தார். அவரை இறக்கிவிட்ட பைக் டாக்ஸி டிரைவரும் அங்கிருந்த பொதுமக்களும் ஓடிவந்து, உடனடியாக மீட்புப் படையினருக்குத் தகவல் கொடுத்து அவரை பத்திரமாக மீட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண், “சாக்கடை தண்ணீர் என் நெஞ்சு வரை முட்டியது, நான் சாகப்போகிறேன் என்றே நினைத்தேன்” எனப் பேட்டியளித்துள்ளார்.

முந்தைய நாள் இரவு இரும்புத் திருடர்கள் இருவர் அந்த மூடியைத் திருட முயன்று, பின்னர் சரியாக மூடாமல் சென்றதே இந்த விபத்துக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. சமீபத்தில் நியூயார்க்கிலும் இதேபோல 56 வயது பாட்டி ஒருவர் விழுந்து உயிரிழந்த நிலையில், போனைப் பார்த்துக்கொண்டு சாலையில் நடப்பவர்களுக்கு இந்த வீடியோ ஒரு பெரிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது.