வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள் பலர், குறிப்பிட்ட அளவு பணம் சம்பாதித்தவுடன் சொந்த ஊருக்கே திரும்பிவிடலாம் என்ற இலக்கோடுதான் பயணத்தைத் தொடங்குகிறார்கள். ஆனால், நிஜத்தில் அது நடப்பதே இல்லை என்பதை அமெரிக்காவில் வாழும் இந்தியரான நிதின் தனது வைரல் வீடியோவில் உடைத்துப் பேசியுள்ளார்.
“5 முதல் 8 கோடி ரூபாய் பேங்க் பேலன்ஸ் வந்ததும் இந்தியாவுக்குப் போய்விடலாம் என்றுதான் நானும் 15 வருடங்களுக்கு முன்பு வந்தேன்; ஆனால், வருமானம் உயர உயர நம்முடைய இலக்குகளும் மாறிக்கொண்டே இருக்கும் என்பதால், வெளிநாட்டு வாழ்க்கையை விட்டுவிட்டு இந்தியா திரும்புவது என்பது நடக்காத காரியம்” என்று அவர் ஓப்பனாகப் பேசியுள்ளார்.
அமெரிக்கா போன்ற நாடுகளில் சாதாரண வேலைகளில் இருப்பவர்கள்கூட தங்களின் அத்தியாவசியத் தேவைகள் போக இந்தியாவிற்குப் பணம் அனுப்பும் அளவுக்குச் சம்பாதிக்க முடிகிறது என்றும், இந்திய வேலைவாய்ப்புச் சந்தையில் உள்ள வருமானக் குறைபாட்டால் பலர் தாயகம் திரும்பத் தயங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், “இந்தியாவில் எகிறி வரும் சொத்து மதிப்பு, கல்வி மற்றும் வாழ்க்கைச் செலவுகளுக்கு 8 கோடி ரூபாய்கூட இப்போது போதாது” என ஒரு தரப்பினரும், “பணத்தைத் தாண்டி வயதான பெற்றோர்கள் மற்றும் குடும்ப உறவுகளுக்காக இந்தியா திரும்புவதே மேல்” என மறுதரப்பினரும் காரசாரமாக விவாதித்து வருகின்றனர்.
