நடப்பு ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியின் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தனது அதிரடி பேட்டிங்கால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். இந்த சீசனில் மொத்தம் 776 ரன்கள் குவித்த அவர், கிறிஸ் கெய்லின் சாதனையை முறியடித்து, ஒரு ஐபிஎல் சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற புதிய வரலாற்று சாதனையைப் படைத்தார்.

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான குவாலிபையர்-2 போட்டியில் ககிசோ ரபாடா, முகமது சிராஜ் போன்ற உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு, வெறும் 47 பந்துகளில் 96 ரன்கள் விளாசி அசத்தினார். பந்தின் திசையை முன்கூட்டியே கணிக்கும் திறன், அசாத்தியமான டைமிங் மற்றும் மணிக்கட்டு வேகம் ஆகியவற்றால் ரன்களை வாரிக் குவிக்கும் வைபவ் சூர்யவன்ஷியை, இளம் வயதிலேயே இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.

 

இளம் வயதில் இந்திய அணியில் அறிமுகமான ‘கிரிக்கெட் கடவுள்’ சச்சின் டெண்டுல்கர், வைபவ் சூர்யவன்ஷியின் அசாத்திய திறமையைப் பாராட்டியதோடு அவருக்கு மிக முக்கியமான அறிவுரை ஒன்றையும் வழங்கியுள்ளார். இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ விருது வழங்கும் விழாவில் பேசிய சச்சின், “வைபவ் வெறும் பலத்தை மட்டும் நம்பி பந்துகளை அடிப்பதில்லை; அவரின் மணிக்கட்டு ஆட்டமும், ஷாட் தேர்வும் மிகவும் தனித்துவமானது. அவர் தனது இயல்பான பேட்டிங் பாணியை எப்போதும் மாற்றிவிடக் கூடாது.

தற்சமயம் அவருக்கு அதிகப்படியான அறிவுரைகளைக் கூறி, அவரது மனதில் குழப்பத்தை ஏற்படுத்துவது தான் அவருக்குப் பெரிய பிரச்சனையாக மாறும். டெஸ்ட் கிரிக்கெட்டில் வயது மற்றும் அனுபவத்துடன் அவர் சவால்களைக் கையாளக் கற்றுக்கொள்வார். இத்தகைய அரிய திறமைக்கு நாம் ஆதரவளிக்க வேண்டும், அதே நேரத்தில் அவர் மீது தொடர்ந்து அழுத்தத்தை ஏற்படுத்தாமல் அவரது ஆட்டத்தை நாம் ரசிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.