திருவாரூர் மாவட்டம் சேங்காளிபுரம் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த செங்கல் சூளை மேஸ்திரியான திருமுருகன் (45), இன்று அதிகாலை அவரது வீட்டில் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தபோது 6 பேர் கொண்ட ஆயுதமேந்திய கும்பலால் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
அதிகாலையில் வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த அந்த மர்மக் கும்பல், திருமுருகனின் மனைவி சுதா மற்றும் மகள் கண் முன்னே அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளது. இதனைத் தடுக்க முயன்ற மனைவி சுதாவிற்கும் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதில் திருமுருகன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த சுதா, தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து விரைந்து வந்த குடவாசல் காவல் துறையினர், திருமுருகனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலை வழக்கு தொடர்பாக முன்விரோதம் அல்லது தொழில் போட்டி காரணமா என்ற கோணத்தில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடிய கும்பலைப் பிடிக்க 3 தனிப்படைகளை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தற்போது சந்தேகத்தின் பேரில் 2 பேரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, கொலையாளிகளை உடனடியாகக் கைது செய்யக் கோரி உயிரிழந்த திருமுருகனின் உறவினர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
