தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களில் அடுத்தடுத்து அரங்கேறியுள்ள இந்த கொடூர அரிவாள் வெட்டுச் சம்பவங்கள் ஒட்டுமொத்த தென்மாவட்டங்களையுமே அதிரவைத்துள்ளன!
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூர் மாதா கோவில் தெருவில், நேற்று முன்தினம் நள்ளிரவு பேனர் வைப்பதில் போதை ஆசாமி ஒருவனுடன் ஏற்பட்ட தகராறு, ஊர் பெரியவர்கள் சமாதானம் செய்தும் தீரவில்லை. நேற்று மாலை திருமண கொண்டாட்டங்கள் மேளதாளத்துடன் கலைகட்டியிருந்த நேரத்தில், திடீரென 3 மோட்டார் சைக்கிள்களில் முகமூடி அணிந்து வந்த 9 பேர் கொண்ட வெறிக்கும்பல், கையில் இருந்த அரிவாள்களால் கண்ணில் பட்டவர்களையெல்லாம் சரமாரியாக வெட்டிச் சாய்த்துள்ளது.
இந்த பயங்கர தாக்குதலில் ரமேஷ் (49), அருள் மாறன் (23), சந்தோஷ்குமார் (21), ராயப்பன் (18), ராம்குமார் (20) மற்றும் மேளம் அடிக்க வந்த மாடசாமி (19) ஆகிய 6 பேர் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்து பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே, இந்த கொடூரக் கும்பல் தப்பி ஓடும் வழியில் நெல்லை அருகே மானூர் தெற்குப்பட்டி கிராமத்தில், ஏன் இவ்வளவு வேகமாக பைக் ஓட்டுகிறீர்கள் என்று கேட்ட அப்துல் ரகுமான் (35) மற்றும் முபாரக் (30) ஆகிய இருவரையும் அரிவாளின் பின்பகுதியால் கொடூரமாகத் தாக்கிவிட்டு பறந்துள்ளது.
அடுத்தடுத்து 8 பேரை பதம் பார்த்த இந்த வன்முறைச் சம்பவம் குறித்து ஆலங்குளம் மற்றும் மானூர் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர வேட்டையில் இறங்கினர்.
சம்பவ இடங்களில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை அக்குவேறாகப் பிரித்து மேய்ந்த தனிப்படை போலீசார், இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட 7 பேரை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்! மீதமுள்ள குற்றவாளிகளை ஸ்கெட்ச் போட்டு தேடி வரும் நிலையில், தென்மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
