பொருளாதாரத்தில் உலகின் மிகப்பெரிய நாடான அமெரிக்காவில், மக்கள் அத்தியாவசிய உணவிற்காகப் போராடும் நிலை அதிகரித்திருப்பது கவலை அளிப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் அங்குள்ள 1,200 குடும்பங்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், பணவீக்கம் மற்றும் விலை உயர்வு காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
குறிப்பாக, கடந்த 2020-ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் 4 சதவீதமாக இருந்த “உணவுப் பற்றாக்குறை” தற்போதைய சூழலில் 10 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேபோல், அன்றாடச் செலவுகளைச் சமாளிக்கத் தங்களது சேமிப்புப் பணத்தைப் பயன்படுத்தும் குடும்பங்களின் எண்ணிக்கை 21.8 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாக அதிகரித்துள்ளது.
குறைந்த வருமானம் உடையவர்கள், குறைந்த கல்வி பெற்றவர்கள் மற்றும் சிறிய குழந்தைகள் உள்ள குடும்பங்களே இந்த நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்கப் பொருளாதாரம் வெளியில் வளர்ச்சி அடைவது போல் தெரிந்தாலும், சமூகத்தின் ஒரு பெரிய பகுதி இன்னும் கடுமையான பொருளாதார அழுத்தத்திலேயே சிக்கித் தவிக்கிறது. ஈரான் போர் காரணமாக எரிசக்தி மற்றும் மளிகைப் பொருட்களின் விலை உயர்ந்திருப்பது மக்களின் வாழ்க்கைச் செலவை மேலும் அதிகரித்துள்ளது.
இது தவிர, வேலைவாய்ப்புக் குறைவு மற்றும் வங்கிகளின் அதிக வட்டி விகிதங்கள் போன்ற காரணங்களால் அமெரிக்க மக்களின் மனநிலையும் நிம்மதியும்கூடப் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக நியூயார்க் ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் ஆய்வு எச்சரிக்கிறது.
