சீனாவின் யுன்னான் மாகாணத்தைச் சேர்ந்த 29 வயதான லியூ ஜியூ (Liu Ziyu) என்ற இளைஞர், வெறும் 3,000 யுவான் (இந்திய மதிப்பில் சுமார் 42,000 ரூபாய்) செலவில், ‘ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ்’ (AI) தொழில்நுட்பத்தின் உதவியோடு ‘ஜோம்பி ஸ்கேவெஞ்சர்’ (Zombie Scavenger) என்ற 3.5 நிமிட குறும் படத்தை உருவாக்கி ஒட்டுமொத்த உலகையும் தன் பக்கம் திருப்பியுள்ளார்.
ஆரம்பத்தில் ரயில் இன்ஜின் மெக்கானிக் படித்து 3 ஆண்டுகள் ரயில் டிரைவராகவும், பின்னர் திருமண போட்டோகிராபராகவும் பணியாற்றிய லியூ ஜியூவுக்கு, சினிமா தயாரிப்பு குறித்து எந்தவொரு முன் அனுபவமும் கிடையாது. ஹாலிவுட்டின் புகழ்பெற்ற அனிமேஷன் படமான ‘வால்-இ’ (Wall-E) திரைப்படத்தால் ஈர்க்கப்பட்டு, ஒரு ரோபோ மற்றும் பொம்மைக்கு இடையேயான காதலை மையமாக வைத்து, வெறும் 10 நாட்களில் இந்த ஏஐ குறும் படத்தை அவர் செதுக்கியுள்ளார்.
This is one of the best short films I’ve seen in years.
Very soon, we’ll stop calling it “AI film” and just call it film. pic.twitter.com/6yjU6HcnzN
— PJ Ace (@PJaccetturo) May 10, 2026
கடந்த மே 9-ம் தேதி சீன சமூக வலைத்தளங்களில் வெளியான இந்த வீடியோவில், ரோபோ ஒன்று நெருப்புக்கோழி மீது குதிரை சவாரி செய்வது போன்ற ஒரு காட்சி, ஹாலிவுட்டின் பிரபல ஏஐ திரைப்பட தயாரிப்பாளர் பிஜே எக்ஸ்செடுரோவின் (PJ Accetturo) கண்ணில் பட்டுள்ளது.
படத்தின் தரத்தைப் பார்த்து மிரண்டு போன அந்த ஹாலிவுட் இயக்குனர், “கடந்த சில ஆண்டுகளில் நான் பார்த்த மிகச்சிறந்த குறும் படம் இதுதான், இதன் இயக்குனருக்கு எனது ஹாலிவுட் நிறுவனத்தில் வேலை கொடுக்க ஆசைப்படுகிறேன்” என்று எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டு, லியூ ஜியூவைத் தேடிக் கண்டுபிடித்து நேரடியாக வேலை வாய்ப்பை வழங்கியுள்ளார்.
தனக்கு ஆங்கிலம் தெரியாது என்பதால் வெளிநாடு வர மறுத்துள்ள லியூ ஜியூ, சீனாவில் இருந்துகொண்டே ஹாலிவுட் புராஜெக்டுகளில் பணியாற்றச் சம்மதம் தெரிவித்துள்ளார். உலக அளவில் 6 கோடிக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து சாதனை படைத்து வரும் இந்த ஏஐ குறும் படத்தின் உரிமையைக் முன்னணி சீனத் திரைப்பட நிறுவனம் ஒன்று நல்ல விலைக்கு வாங்கியுள்ள நிலையில், “ஏஐ-க்கு வெறும் கட்டளைகளை மட்டும் கொடுக்காமல், கதையின் லாஜிக், எமோஷன் மற்றும் கதாபாத்திரத்தின் மூடைக் கற்றுக்கொடுத்தால் அற்புதம் நிகழ்த்தலாம்” என்று இந்த இளம் ஏஐ மாஸ்டர் லியூ ஜியூ அக்மார்க் சிம்பிள் டிப்ஸை பகிர்ந்து நெட்டிசன்களின் பாராட்டுகளை அள்ளி வருகிறார்.
