கேரள மாநிலத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டாக (டி.எஸ்பி) பணியாற்றி வந்த அனில்குமார், லஞ்சம் வாங்கிய வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மனித கழிவுகளை அகற்றும் வாகனம் ஒன்றை அனில்குமார் பறிமுதல் செய்திருந்தார்.
அந்த வாகனத்தை விடுவிப்பதற்காக அதன் உரிமையாளரிடம் அவர் ₹2 லட்சம் லஞ்சமாகக் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத வாகன உரிமையாளர், இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரிடம் ரகசியமாகப் புகார் அளித்தார்.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தலின்படி, வாகன உரிமையாளர் முதற்கட்டமாக ரசாயனம் தடவிய ₹50 ஆயிரம் பணத்தை அனில்குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று கொடுத்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் அதிரடியாக வீட்டிற்குள் நுழைந்தனர்.
இதைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அனில்குமார், போலீசாரிடம் இருந்து தப்பிக்க வீட்டின் சுற்றுச்சுவரைத் தாண்டி குதித்து ஓடினார். எனினும், லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.
₹50 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக டி.எஸ்பி அந்தஸ்தில் உள்ள உயர் போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
