பெங்களூரு பகுதியில் கள்ளக்காதலியின் வீட்டிற்கு வந்த பெயிண்டர் முகமது காசிம் என்பவர், பெண்ணின் கணவர் குடும்பத்தினரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். முகமது காசிமும், அந்த இளம்பெண்ணும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்துள்ளனர்.
பெண்ணின் வீட்டில் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வேறு ஒரு வாலிபருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். இருப்பினும், திருமணத்திற்குப் பிறகும் இருவரும் தங்களது காதலைத் தொடர்ந்துள்ளனர்.
முகமது காசிம் அடிக்கடி பெங்களூருவுக்கு வந்து அந்தப் பெண்ணைச் சந்தித்து வந்ததை அறிந்த கணவர் குடும்பத்தினர், அவரை எச்சரித்தும் அந்தப் பெண் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 25-ம் தேதி முகமது காசிம் கள்ளக்காதலியின் வீட்டிற்கு வந்திருந்தபோது, கணவர் குடும்பத்தினர் அவரை கையும் களவுமாகப் பிடித்துள்ளனர். ஆத்திரமடைந்த அவர்கள், அவரை இழுத்து வந்து உருட்டுக்கட்டை, கற்கள் மற்றும் இரும்பு கம்பியால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
அருகில் இருந்தவர்கள் தடுத்து மீட்டதைத் தொடர்ந்து, படுகாயமடைந்த காசிம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, பெண்ணின் கணவர் உட்பட குடும்பத்தினர் 5 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
