சென்னை கோடம்பாக்கத்தில் 16 வயது சிறுவனை மதுபோதையில் ஆழ்த்தி பாலியல் வன்கொடுமை செய்த புகாரில், வடபழனி காவல் நிலைய தலைமை காவலர் வேலப்பன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிப்பதாகத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

வேலியே பயிரை மேய்ந்த கதையாக, காவல்துறை அதிகாரியே இத்தகைய கீழ்த்தரமான குற்றத்தில் ஈடுபட்டிருப்பது ஒட்டுமொத்த காவல்துறைக்கே தீராத களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவிற்குச் சீர்குலைந்து கிடக்கிறது என்பதற்கு இக்கொடூர நிகழ்வே மிகச்சிறந்த சான்று என்றும் அவர் தனது எக்ஸ் தள பதிவில் சாடியுள்ளார்.

மேலும், முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் உள்துறை தன் கடமையிலிருந்து முற்றிலும் தவறிவிட்டதையே இது காட்டுவதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், குற்றம் சாட்டப்பட்ட வேலப்பன் மீது உடனடியாகத் துறை ரீதியான நடவடிக்கை எடுத்து அவரைப் பணியில் இருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்த வழக்கை விரைந்து விசாரித்து அவருக்குச் சட்டப்படியான மிகக் கடுமையான தண்டனை பெற்றுத்தருவதோடு, பாதிக்கப்பட்ட சிறுவனுக்குத் தகுந்த மனநல ஆலோசனையும், அவதிப்படும் அந்தக்குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் அந்தப் பதிவில் கேட்டுக்கொண்டுள்ளார்.