அமெரிக்காவின் கடுமையான தடைகள் மற்றும் முற்றுகைகளையும் மீறி, ஈரான் தனது ரகசிய ‘நிழல் கப்பல் படை’ மூலம் தினமும் 1.5 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயை உலக நாடுகளுக்குத் தொடர்ந்து விற்பனை செய்து வருகிறது.

கடந்த ஏப்ரல் 13 முதல் ஹோர்முஸ் ஜலசந்தி பகுதியில் அமெரிக்கா மற்றும் ஈரானின் முற்றுகை தீவிரமடைந்துள்ள நிலையிலும், ஈரான் கடந்த 45 நாட்களில் மட்டும் சுமார் 70 மில்லியன் பீப்பாய் எண்ணெயைச் சட்டவிரோதமாக விற்பனை செய்து சாதித்துள்ளது.

வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கையின்படி, இந்த கச்சா எண்ணெய் பெரும்பாலும் சீனா, இந்தோனேசியா மற்றும் மலேசியா போன்ற நாடுகளுக்கே அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அமெரிக்கச் செயற்கைக்கோள்கள் மற்றும் ரேடார்களின் கண்காணிப்பில் இருந்து தப்பிக்க ஈரான் பல தந்திரங்களைக் கையாண்டு வருகிறது.

இதற்காகப் பழைய எண்ணெய்க் கப்பல்களைப் பயன்படுத்தும் ஈரான், அவற்றின் அடையாள எண்களை மசியால் அழித்தும், சரக்குகளைக் கருப்புத் தார்ப்பாய்களால் மூடியும் இரகசியமாக இயக்குகிறது. மேலும், அமெரிக்கா தாக்குவதைத் தவிர்க்க ஒரே நேரத்தில் பல கப்பல்களை இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை வீரர்களின் பாதுகாப்புடன் ஓமான் வளைகுடா வழியாக வெளியேற்றுகிறது.

இந்த ஆபத்தான பயணத்தில் இதுவரை இரண்டு ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் அமெரிக்காவால் அழிக்கப்பட்ட போதிலும், 2025-ஆம் ஆண்டில் மட்டும் ஈரான் 31 பில்லியன் டாலர் மதிப்பிலான எண்ணெயை விற்றுத் தனது பொருளாதாரத்தைத் தக்கவைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.