சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு பெற்றோருடன் வந்த கன்னியாகுமரியைச் சேர்ந்த 16 வயது பிளஸ்-1 மாணவன், அங்குத் தங்கி இருந்தபோது அவனுக்கு நேர்ந்த பாலியல் கொடூரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தச் சிறுவனின் பெற்றோர் சொந்த ஊருக்குத் திரும்பிய நிலையில், சிறுவன் மட்டும் உறவினரான குமரேசன் என்பவரது வீட்டில் தங்கியுள்ளான்.
சம்பவத்தன்று இரவு குமரேசன், வடபழனி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரியும் தனது நண்பரான வேலப்பனை வீட்டுக்கு அழைத்து வந்து ஒன்றாக மது அருந்தியுள்ளார்.
குமரேசன் போதையில் தூங்கியதும், வக்கிர புத்தி காட்டிய ஹெட் கான்ஸ்டபிள் வேலப்பன், தூங்கிக் கொண்டிருந்த சிறுவனை எழுப்பி வாயில் வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றி, அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவன் கத்தி கூச்சலிட்டு, அங்கிருந்த டிவி ரிமோட்டால் காவலரின் தலையில் அடித்துவிட்டு, வீட்டை வெளிப்புறமாகப் பூட்டிவிட்டு அசோக் நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடித் தப்பித்துக் கதறியுள்ளான்.
சிறுவன் கொடுத்த புகாரின் பேரில் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தலைமைக் காவலர் வேலப்பனை அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
