பிரபல பெங்காலி திரைப்பட இயக்குனர் அனிக் தத்தா (66), கொல்கத்தாவில் உள்ள ஒரு கட்டிடத்தின் ஆறாவது மாடியில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். கொல்கத்தாவின் டோவர் லேனில் வசித்து வந்த அவர், நேற்று மதியம் ஹிந்துஸ்தான் பார்க் பகுதியில் உள்ள தனது மனைவிக்குச் சொந்தமான குடியிருப்புக்கு வந்துள்ளார்.
ஆனால், அவர் தனது மனைவியைச் சந்திக்கச் செல்லாமல், நேரடியாக அந்த கட்டிடத்தின் மொட்டை மாடிக்குச் சென்று அங்கிருந்து கீழே குதித்துள்ளார். உடனே அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் குதித்த மொட்டை மாடியில் இருந்து தற்கொலை கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில், தனது மரணத்திற்கு யாரும் காரணமில்லை என்று அவர் எழுதியுள்ளார்.
அனிக் தத்தா இதுவரை 7 திரைப்படங்களை இயக்கியுள்ளார். குறிப்பாக, 2012-ல் வெளியான இவருடைய முதல் நகைச்சுவைத் திரைப்படமான ‘பூட்டர் பவிஷ்யத்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இவரது மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதலமைச்சர் சுவேந்து அதிகாரி மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
