அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் இன்னும் முழுமையாகத் தணியவில்லை.

இதற்கிடையில், ஹார்முஸ் ஜலசந்தியில் விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்கி, அங்கு அமைதியைக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளதாகவும், இரு நாடுகளுக்கும் இடையேயான அமைதி ஒப்பந்தம் இறுதி நிலையை எட்டியுள்ளதாகவும் ஈரான் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

மேலும், அடுத்த 30 நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வணிகப் போக்குவரத்தைச் சீரமைக்க ஈரான் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், ஓமனின் உதவியோடு இது திட்டமிடப்படும் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டிருந்தது.

ஈரானைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து தனது படைகளைத் திரும்பப் பெற அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாக ஈரான் ஊடகங்கள் வெளியிட்ட இந்தத் தகவல்கள் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

ஆனால், ஈரானின் இந்த அதிரடி வாதங்கள் அனைத்தையும் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மொத்தமாக மறுத்து, அது ஒரு ‘போலி ஒப்பந்த வரைவு’ என்று சாடியுள்ளது. ஈரான் அரசு ஊடகங்கள் பரப்புவது முற்றிலும் பொய்யான செய்தி என்றும், உண்மைகளை மட்டுமே மக்கள் நம்ப வேண்டும் என்றும் வெள்ளை மாளிகை தெளிவுபடுத்தியுள்ளது.

இது குறித்துப் பேசிய அதிபர் டொனால்ட் டிரம்ப், முன்னாள் அதிபர் ஒபாமா காலத்தில் போடப்பட்ட மோசமான ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் போல இல்லாமல், தற்போதைய பேச்சுவார்த்தைகள் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில், முறையான வழியில் நடந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை ஈரானின் மீதான தடைகள் முழுமையாகத் தொடரும் என்றும், ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்கக் கூடாது என்பதில் அமெரிக்கா உறுதியாக இருப்பதாகவும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.