தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் (X) பதிவில், தமிழக அரசு மருத்துவமனைகளின் அவல நிலை குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
திருவாரூர் அரசு மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த உடலை எலிகள் கடித்துக் குதறிய கொடூரச் சம்பவமும், சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏற்பட்ட தொடர் மின்வெட்டு காரணமாகக் கர்ப்பிணிப் பெண் ஒருவர் மயக்கமடைந்த அநியாயமும் தமக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய சம்பவங்கள் பொதுமக்களிடையே அரசு மருத்துவமனைகள் குறித்த ஒருவித அச்சத்தையும், பாதுகாப்பற்ற உணர்வையும் உண்டாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆளும் கட்சியின் அமைச்சர்களும் நிர்வாகிகளும் அரசு மருத்துவமனைகளுக்கு ஆய்விற்குச் செல்லும்போது, மருத்துவர்களைப் போல வெள்ளைக்கோட் அணிந்துகொண்டு அங்கிருப்பவர்களிடம் கேள்வி கேட்பது போலவும், அதற்குப் பின்னணி இசை சேர்த்து ‘ரீல்ஸ்’ வீடியோக்கள் வெளியிடுவதிலும் மட்டுமே குறியாக இருக்கிறார்கள் என்று நயினார் நாகேந்திரன் சாடியுள்ளார்.
ஆனால், அரசு மருத்துவமனைகளின் தரம் மற்றும் அடிப்படை வசதிகளில் இதுவரை எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். வெறும் வீடியோ எடுப்பது, வசனம் பேசுவது ஆகியவற்றைத் தாண்டி ‘நிர்வாகம்’ என்ற மிக முக்கியப் பொறுப்பு தங்களுக்கு இருக்கிறது என்பதை முதலமைச்சரும் அவரது அமைச்சர்களும் எப்போது உணர்வார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
