கேரளாவில் கடந்த வாரம் நடந்த ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயன், அவரது மகள் வீணா மற்றும் மருமகன் முகமது ரியாஸ் ஆகியோரைக் குறிவைத்து அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு நடத்தியுள்ளது.

சிஎம்ஆர்எல் தாது நிறுவனத்திடமிருந்து, பினராயி விஜயனின் மகளின் ஐடி நிறுவனம் எவ்வித சேவைகளும் வழங்காமல் சட்டவிரோதமாக ₹1.72 கோடி பணம் பெற்றதாக எழுந்த புகாரில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இதற்கிடையே, கேரள உயர் நீதிமன்றம் இந்த விவகாரம் தொடர்பான வழக்கை தள்ளுபடி செய்த அடுத்த 24 மணி நேரத்திற்குள், திருவனந்தபுரம், கண்ணூர், கோழிக்கோடு என மாநிலம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த மெகா வேட்டை அரங்கேறியது.

<a href=”http://

“>

இந்த அதிரடிச் சோதனையால் கொதித்தெழுந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்கள், பினராயி விஜயன் வீட்டின் முன்பு விடிய விடிய முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சோதனை முடிந்து பெண் அதிகாரிகள் உட்பட அமலாக்கத்துறை அதிகாரிகள் காரில் புறப்பட முயன்றபோது, ஆவேசமடைந்த கும்பல் கார் மீது கற்கள் மற்றும் ஹெல்மெட்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியதில் காரின் முன் பக்கக் கண்ணாடி நொறுங்கியது.

போலீசாரும் மத்திய பாதுகாப்புப் படையினரும் தடியடி நடத்தி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரக் கடுமையாகத் திணறினர். இந்தச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள சிபிஎம் தலைமை, டெல்லியில் கெஜ்ரிவாலுக்கு நடந்தது போல கேரளாவிலும் பினராயி விஜயனின் பிம்பத்தைச் சிதைக்க பாஜகவின் அரசியல் நீட்சியாக அமலாக்கத்துறை வன்ம நாடகம் ஆடுவதாகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது.